Monday, May 06, 2013

கவிதைகளிலிருந்து தூரமாய் நான்..!

தென்றலாய் வந்தும் - எனைப் 
புயலாய் புலம் பெயர்த்தெடுத்தாய்..!!
புலனெலாம் நெகிழ - நீ 
எனைப் புதிதாய் பெற்றெடுத்தத் தாய்..!!
உயிர்க்கவிதையாய் நீ இருப்பதாலோ என்னவோ?
கவிதைகளிலிருந்து தூரமாய் நான்..!

Monday, January 16, 2012

உன் மேல் காதல்..!

--------- காலமே, உன் மேல் காதல்! --------

 

எதிர்பாராத ஒருநாள்...! எதிர்பாராத ஒரு தருணம்..!

அவள் என்ற ஓர் அதீதம் எனைக் கடந்தது..!

மெல்ல எனை ஈர்த்து.. கள்ளமாய் புன்னகைத்தது.!

அந்த ஈர்ப்பின் வலிமையில்.. என் சுயமழித்தது..!

 

ஒவ்வொரு நொடியும் புதிதாய்.. புது உணர்வாய்..

ஒவ்வொரு துடிப்பும்.. ஒரு புதுத்தாளமாய்..

அவளருகில் பலமடங்கும்.. தூரத்தில் பாதியாயும்..

இதயம் அவளிசைக்கு.. எந்திரமாய் ஆடியது..!

 

கடிகாரம் பொய் சொல்லியது..

கனவுகள் நனவிலும் நீண்டன..

உறவுகள் அந்நியமாய் நகர்ந்தன..

உணர்வுகள் அன்னிச்சையாய் கடந்தன..

அல்ல அல்ல!!

உணர்வுகள் அவளிச்சையாய் கடந்தன..!

கவித்துவமான கணங்கள்.. கனமில்லா இதயம்..!

விழிநிரம்பிய அவள்.. அவள்நிரம்பிய உலகம்..!

சுதாரித்த மூளையும்.. சுதந்திரம் இழந்தது..

"அவள்" எனும் போதையில்.. அடிமையாய் கிடந்தது..!

புலன்கள் அத்தனையிலும்.. புலம்பெயாரா அவள்..!

அவள் பெயர்ந்தால்.. அத்தனையும் சூன்யம்..!

 

அந்த தருணத்தில்.. பெயர்ந்தளே அவள்..!

அழகாய் புன்னகைத்தவள்.. அழவும் செய்தாள்..!

அழ வைக்குதென்றால்.. அகல்வது ஏனடியே?! - எனை

விழ வைப்பதிலே.. உனக்கென்ன வேட்கையடி?!

 

விளக்கம் தருபவளல்ல அவள்.. விலக்கா இவள் மட்டும்!

விலக யத்தனித்தாள்.. விழியில் அக்கினி கொண்டாள்..!

விளங்க மறுக்குதடி இதயம்.. விலக்கா நானும் இங்கே!

அறிவை மாய்க்குதடி இதயம்.. அழகின் மாயையடி இதுவும்!

 

முன் விரைந்த கடிகாரம்..

நகராதிருந்து பழிதீர்க்கும்..!

அவள் சார்ந்த அத்தனையும்..

அழகாய் இருந்த நிலைமாறி..

வலியாய் மாறி ரணம்சேர்க்கும்..

 

கோடையும் வாடையும் நிரந்தரமா?

காலமும் கோலமும் நிரந்தரமா? - நான்

நகர மறுத்தாலும் நகருதே காலம்..

மறுத்தாலும் மாற்றத்தை விதைத்து..!

 

ஒரு மாலையில் கதிர் மறைவதை ரசித்தேன்..

மறு காலையில் புது ஜனனமும் எடுத்தேன்..

மாயை உணர்வித்தவள் மாயமாய் எங்கோ!

மறுமுறை பிறப்பித்த காலமே இங்கே!

 

மாறாத காலம்! மாற மறக்காத காலம்!

மயக்கங்கள் இனி அவள் மேல் இல்லை..!

மயக்கிய "காலமே" உன் மேல் காதல்..!

Monday, December 05, 2011

அலைமகளே..!

அணைத்துப் போகிறாயா? - அழகேயெனை

அறைந்துப் போகிறாயா? - இல்லை

அழுதுப் போகிறாயா? - நெஞ்சில்

எழுதிப் போகிறாயா? - என்காதில்

சொல்லிப் போகிறாயா?

அலைமகளே..! அலைமகளே..!

உனை அணைத்துக் கிடக்கிறேன்..! - நீ

அணைக்கக் காத்துக்கிடக்கிறேன்..! - உன்

கண்ணீர் துடைக்கக் கரையாய் இருக்கிறேன்..!

உன்தூரிகை கிறுக்கத் தரையாய் விரிகிறேன்..!

உன்காதல் கேட்டுக் கடல்மணலாய் உறைகிறேன்..!

நேரம் மறந்து.. நீண்டு கிடக்கிறேன்..! - உன்னால்

ஈரம் சுரந்து.. இதயம் கணக்கிறேன்.!


பாலையாய் மாற.. வேண்டாம் எனக்கு..! உன்

பார்வையின் ஈரம்.. போதும் எனக்கு..! நீ

நெருங்கினும்.. நீங்கினும்.. உன் அருகிலே

அருங்கிலே.. என்ஆயுளும் கழியட்டும்..!

Wednesday, August 24, 2011

அந்நியமாய் அத்தனையும்..!

அந்நியமாய் அத்தனையும்..!
அவளோ?! அவள் புன்னகையோ?!
வனப்பாய் இசையெனப் பேசும் சிரிப்போ?! - 
வரம்பின்றி கவிழ்க்கும் கன்னக்குழியோ?!
வாட்டி வதைக்கும் வஞ்சக விழியோ?!
அத்தனையும் அந்நியமாய்!! - எந்த 
உலகத்து  தேவதையடி நீ?!

Saturday, July 16, 2011

தேவதைகள் வேறெங்குமில்லை!!

அவளின் பிஞ்சுவிரல்பிடித்து நடந்து கொண்டிருந்தேன்...!

பிஞ்சு மாலைக்கு கொஞ்சம் பொறாமை..! முகம் சிவந்தது! 

சூரியன் ஒளிந்து சில மணித்துளிகளில்..

வண்ண மேகங்களை.. ஆங்காங்கே யாரோ தூவி..

வண்ணம் பிரிகையிலே.. "நில்!" என்று சொல்லியதாய்..

தனக்கே உரித்தாய்.. தனிக்கவிதை எழுதியிருந்தது வானம்..!

 

"இங்கு ஏன் வந்தோம்?"

"பூங்கா அழகு .. மரங்கள் அழகு.. நல்ல காற்று..!!" என்றேன்.

"நம் வீட்டருகிலும் இது போலத்தானே இருக்கும்..! இங்கு ஏன் வந்தோம்?" - மறுபடியும் அவள்!

 

கண்கள் உருட்டி உருட்டி.. இமைகள் அகல விரித்து.. புருவங்கள் நடனமாட.. 

கவிதை கேட்கும் கேள்விக்கு.. பதிலளிக்க கொஞ்சம் தெளிய வேண்டியிருந்தது..

 

"புது இடம்.. புது மக்கள்.. புது நிகழ்வுகள். புது அனுபவத்திற்காக. !" என்றேன்.

"இந்த மரங்களெல்லாம்.. இங்கேயேதானே இருக்கிறது? .. அதற்கெல்லாம் சலிக்காதா?!" 

 

மரங்களை பார்த்தேன்..!

பச்சையின் பல பரிமாணங்களை காட்டிய மரங்கள்.. நொடிகளில் கறுத்திருந்தன!

வானத்தில்.. வனம் பூசிய வானத்தில்.. நீலம், சாம்பல், கருமை, இன்னும் எத்தனையோ..!

இருளுக்கும் ஒளிக்கும்.. இத்தனை கூடலா? இத்தனை ஊடலா?

புதிதாய் முளைத்த புவியின் சூரியன்கள்.. மரங்களின் பாதங்களுக்கு.. மஞ்சள் பூசி விளையாடின..!

அதோடு முளைத்த.. அத்திடலின்.. நீர்வீச்சுக்கள்.. அந்த மஞ்சளை, கழுவவா நீர் தூவின? 

அதுவும்.. நளினமாய்.. நாட்டியமாடிக் கொண்டே?!

 

"சலிக்காதா?!" - இருகரங்களாலும் எனை இழுத்து.. கேள்விப்புருவம் உயர்த்தினாள்! அவள் விடுவதாய் இல்லை!

 

"சலிக்காது..! அதற்குதான் நகர முடியாதே?! அதனால... அது அங்க இருந்த படியே, மாறி, மாறி வரும் காற்று, வெயில், குளிர், மழை.. இப்படி எல்லா பருவங்களையும்.. எல்லா நிமிடங்களையும், தனக்கு ஏத்த மாதிரி, மாத்திக்கிட்டு..அல்லது,. அதுக்கு ஏத்த மாதிரி தன்னை மாத்திக்கிட்டு.. அழகா .. ஒவ்வொரு நொடியையும் ரசிச்சுகிட்டே வாழும்?!" - கூறி முடித்து.. சுதாரித்தேன்..!

 

"அப்பா! புரிய வச்சுட்டேன்!" - என்று எனக்கு ஒரு சபாஷ் சொல்ல முயல்வதற்குள்..

 

"நமக்கும் தான்.. எல்லாம் மாறி மாறி, அழகழகா வருதே? நீ ஏன்.. புது அனுபவம்!.. புது அனுபவம்!-னு, எங்கெங்கேயோ போற?" கணை தொடுத்தாள்..!

 

தூரத்தில் சட்டென்று கடந்த காரின் ஒளிக்கதிர்கள்.. கன்னத்தில் "பளார்" என்று அறைந்து விட்டு கடந்தனவோ.. என்பது போல..!!

 

வாரித் தூக்கினேன்.. தோளில் சாய்த்து.. அணைத்து.. விழி மூடினேன்.. நீள் சுவாசம் கொண்டேன்.! முத்தமிட்டேன்..! பதிலின்றி தோற்றேன்!

 

அமைதியாய் சிலநிமிடங்கள் கடந்தன..! கடந்த காற்று குசுகுசுத்தது..!

 

"பதில் சொல்லிப்போனதோ?!"

 

"இருக்கலாம்.. இருந்தும்... என் புலன்களுக்கு எட்டிவிடவா போகிறது?!" புன்னகைத்து நடந்தேன்..!

 

அவளோடு.. இயற்கையும் துணைக்கு வந்தது..! 

மரங்கள்.. "பெருமிதமின்றி".. தலையசைத்து..என் தேவதைக்கு விடைகொடுத்தன..!

Sunday, June 12, 2011

தாளம் தப்பியும் இன்னிசை!

மழைபெய்து ஓய்ந்திருந்தது..!

மழைமெழுகி ஈரம் காயாத தரைகள்..!

அவளோடு விரல்பிடித்து நடந்திருந்தேன்.!

பெயரறியா பூச்சியொன்று கடந்தது..!

நின்றாள் அவள்..! நிதானித்து கவனித்தாள்..!

கண்டு அவளோடு.. களிநடனமாடி...

மண்ணுக்குள் மறைந்தது.. நொடிகளில்..!

யார்சொல்லிக் கொடுத்ததோ? என்றெண்ணி முடிப்பதற்குள்..

சிறுகல் எடுத்தாள்..! மண்பறித்து தேடினாள்..!

உதடுகள் பிதுக்கி.. உச்சுக்கள் கொட்டி..

மலரென மல்ர்விரல்கள் விரித்து..

தூரிகையாய் சிலமுறை சுழற்றி..

காற்றில் ஓவியம் வரைந்துகொண்டே சொன்னாள்..

 

"காணும்.. காணாப் ..போச்!"

 

தாளம் தப்பியும் இன்னிசையாய் ஒலித்ததது..!

வரையாவிடினும்.. உயிரோவியமாய் ஒளிர்ந்தது..!

மழலையே நீ வாழி..! மகளே  நீ வாழி..! எனக்கும் 

தாய்மையை உணர்வித்த மகோன்னதமே நீ வாழி!

Wednesday, May 25, 2011

"என் இனிய நல்லவா..!"

"ஒழுக்கத்திற்கான உன் வரையறை என்ன?" என்றாள்.

 

"பின்னாளில் எண்ணி வருந்தும் எதையும் இந்நாளில் செய்யாதிருப்பது!" என்றேன்.

 

"என் இனிய நல்லவனே!" என்று கூறிக்கொண்டே..

கன்னங்கள் இரண்டையும் கைகளால் பிடித்து..

செல்லமாய் இழுத்து.. மெல்லமாய் தலையில் இடித்து..

மூக்கு நுனிகள் உரசி.. நொடிமுத்தம் தந்தாள் உதட்டில்!!

 

கண்மூடினேன்...

 

அவள் வாசம்.. சுவாசம்.. ஸ்பரிசம்.. 

அத்தனையும் ஒரு சேர உள்ளிழுத்தேன்..!

அந்த நொடியை.. நொடிகளாய் நீட்டினேன்..!

அவளோடு லயித்தேன்.. அகத்தில் தியானித்தேன்..!!

 

விழிக்கையில்..

 

சிரிக்கும் கண்களும்.. துடிக்கும் உதடுமாய்..

நாணம் துணைகொண்டு.. நகர்ந்திருந்தாள் சில அடிகள்..

தீண்டி விலகிய தென்றலாய்.. 

முகம் பட்டு நழுவுகிற மென்பட்டுத் துகிலாய்..

பட்டுச் சிறகசைக்கும் பறவையாய்..காற்றோடு 

நளினமாய் நகர்ந்துகொண்டிருந்தாள்.. என் தேவதை..!