Monday, January 16, 2012

உன் மேல் காதல்..!

--------- காலமே, உன் மேல் காதல்! --------

 

எதிர்பாராத ஒருநாள்...! எதிர்பாராத ஒரு தருணம்..!

அவள் என்ற ஓர் அதீதம் எனைக் கடந்தது..!

மெல்ல எனை ஈர்த்து.. கள்ளமாய் புன்னகைத்தது.!

அந்த ஈர்ப்பின் வலிமையில்.. என் சுயமழித்தது..!

 

ஒவ்வொரு நொடியும் புதிதாய்.. புது உணர்வாய்..

ஒவ்வொரு துடிப்பும்.. ஒரு புதுத்தாளமாய்..

அவளருகில் பலமடங்கும்.. தூரத்தில் பாதியாயும்..

இதயம் அவளிசைக்கு.. எந்திரமாய் ஆடியது..!

 

கடிகாரம் பொய் சொல்லியது..

கனவுகள் நனவிலும் நீண்டன..

உறவுகள் அந்நியமாய் நகர்ந்தன..

உணர்வுகள் அன்னிச்சையாய் கடந்தன..

அல்ல அல்ல!!

உணர்வுகள் அவளிச்சையாய் கடந்தன..!

கவித்துவமான கணங்கள்.. கனமில்லா இதயம்..!

விழிநிரம்பிய அவள்.. அவள்நிரம்பிய உலகம்..!

சுதாரித்த மூளையும்.. சுதந்திரம் இழந்தது..

"அவள்" எனும் போதையில்.. அடிமையாய் கிடந்தது..!

புலன்கள் அத்தனையிலும்.. புலம்பெயாரா அவள்..!

அவள் பெயர்ந்தால்.. அத்தனையும் சூன்யம்..!

 

அந்த தருணத்தில்.. பெயர்ந்தளே அவள்..!

அழகாய் புன்னகைத்தவள்.. அழவும் செய்தாள்..!

அழ வைக்குதென்றால்.. அகல்வது ஏனடியே?! - எனை

விழ வைப்பதிலே.. உனக்கென்ன வேட்கையடி?!

 

விளக்கம் தருபவளல்ல அவள்.. விலக்கா இவள் மட்டும்!

விலக யத்தனித்தாள்.. விழியில் அக்கினி கொண்டாள்..!

விளங்க மறுக்குதடி இதயம்.. விலக்கா நானும் இங்கே!

அறிவை மாய்க்குதடி இதயம்.. அழகின் மாயையடி இதுவும்!

 

முன் விரைந்த கடிகாரம்..

நகராதிருந்து பழிதீர்க்கும்..!

அவள் சார்ந்த அத்தனையும்..

அழகாய் இருந்த நிலைமாறி..

வலியாய் மாறி ரணம்சேர்க்கும்..

 

கோடையும் வாடையும் நிரந்தரமா?

காலமும் கோலமும் நிரந்தரமா? - நான்

நகர மறுத்தாலும் நகருதே காலம்..

மறுத்தாலும் மாற்றத்தை விதைத்து..!

 

ஒரு மாலையில் கதிர் மறைவதை ரசித்தேன்..

மறு காலையில் புது ஜனனமும் எடுத்தேன்..

மாயை உணர்வித்தவள் மாயமாய் எங்கோ!

மறுமுறை பிறப்பித்த காலமே இங்கே!

 

மாறாத காலம்! மாற மறக்காத காலம்!

மயக்கங்கள் இனி அவள் மேல் இல்லை..!

மயக்கிய "காலமே" உன் மேல் காதல்..!

No comments: