Saturday, May 30, 2009

நீ!

மறக்க நினைக்கையில்

     நகைக்க மலரும் முகமலர் நீ!

இதயம் மறைந்ததாய்

    தகிக்க உணரும் உயிர்வலி நீ!

ஒரு கிராமத்துக் காலை..!

"டேய் கருப்பா..! முனியனை கூட்டிக்கிட்டு மாட்டெல்லாம் குளியாட்டி கூட்டியாடா..!" பின்வாசலிலிருந்து வந்த சத்தம் கேட்டு விழித்தான் கருப்பன்..! யாரும் தண்ணீர் ஊற்றாமலேயே பளிச்சென தண்ணீர் அடித்தது போல் சட்டென எழுந்திருந்தான். உள்ளிருந்து வந்த அந்த குரலுக்கு அவ்வளவு சக்தி அவனை பொறுத்தமட்டில்.

 

இவ்வளவு நேரம் அவனை அடித்து எழுப்ப முயன்று தோற்ற சூரியனை.. சோம்பல் முறித்தவண்ணம் மெல்ல நோக்கினான்.

         "த்து..உன்னை எழுப்ப சொன்னா, இந்த மேகத்து சேலைல மூஞ்சிய ஒளிச்சுக்கிட்டு இருக்க..! போடாங்...!"  அடுத்த வார்த்தை கேட்க பயந்து கரும் மேகம் ஒன்றின் பின் ஒளிந்தான் கதிரவன்.

 

"அதான் வெயில் அதிகமில்லையே பொறகேன் குளியாட்ட சொல்லுற..!" சத்தமாய் கேட்டான்.

 

"வெட்கங்கெட்ட தெம்மாளி..!, ஒரு வாரமா குளியாட்டாம கடக்கு. கசப்பு கிசப்பு வந்து தொலையுண்டா! வெக்காலமா இருக்கா! எந்திருச்சியா இல்ல நான் அங்க வரணுமா?" - என்றாள், இம்முறை கொஞ்சம் சத்தமாய்!

 

"இந்த கெளவிக்கு வேற வேலை இல்ல.." முணுமுணுத்துக்கொண்டே கைலியை கட்டிக்கொண்டான்.

 

"நாச்சாயின்னு பேர் வச்சதுக்கு நச்சரிப்புன்னு வச்சு தொலைஞ்சானா உங்கப்பன்!" பக்கத்தில் இருப்பவனுக்கே புரியாத அளவுக்கு உதடு பிரியாமல் முணுமுணுத்தான்.

 

"இருடி. போய் அம்மாச்சிக்கிட்ட சொல்றேன்.." சொல்லிக்கொண்டே வாசலை தாண்டி உள்ளே ஓடினான் முனியன்.

 

சட்டென நகர்ந்து, காலரை பிடித்து இழுத்தான் கருப்பன். "இவ்வ்வ்.. இந்தா இதையும் சேத்து சொல்லு" சொல்லிக்கொண்டே பொறடியில் மெல்லமாய் ஒரு போடு போட்டான்.

 

சிணுக்கி கொண்டே உள்ளே போனான் முனியன். "அம்மாச்சி..! அண்ணன் அடிச்சுபுட்டான்.. ம்ம் ஹும் ஹுச்" சொல்லிக்கொண்டே பின்வாசல் படியில் போய் உட்கார்ந்து கொண்டான்.

 

"ம் ..வந்துட்டியா. நீலிக்கு கண்ணீர் நெத்தியிலயாம். மாட்ட குளியாட்டி மேய ஓட்டி விட்டு  வாங்கடான்னா.. எவனாவது நகர்ரானா பாரு.  அம்மி மேல காப்பி இருக்கு. எடுத்து குடிச்சிட்டு, அவன்ட்ட ஒன்ன போய் குடு. அவன் கடக்குறான் காட்டுப்பய. அழுவாம போடி கண்ணு. மணியாச்சு .. அப்பறம் வெயில் வந்துரும். "