
அவளின் பிஞ்சுவிரல்பிடித்து நடந்து கொண்டிருந்தேன்...!
பிஞ்சு மாலைக்கு கொஞ்சம் பொறாமை..! முகம் சிவந்தது!
சூரியன் ஒளிந்து சில மணித்துளிகளில்..
வண்ண மேகங்களை.. ஆங்காங்கே யாரோ தூவி..
வண்ணம் பிரிகையிலே.. "நில்!" என்று சொல்லியதாய்..
தனக்கே உரித்தாய்.. தனிக்கவிதை எழுதியிருந்தது வானம்..!
"இங்கு ஏன் வந்தோம்?"
"பூங்கா அழகு .. மரங்கள் அழகு.. நல்ல காற்று..!!" என்றேன்.
"நம் வீட்டருகிலும் இது போலத்தானே இருக்கும்..! இங்கு ஏன் வந்தோம்?" - மறுபடியும் அவள்!
கண்கள் உருட்டி உருட்டி.. இமைகள் அகல விரித்து.. புருவங்கள் நடனமாட..
கவிதை கேட்கும் கேள்விக்கு.. பதிலளிக்க கொஞ்சம் தெளிய வேண்டியிருந்தது..
"புது இடம்.. புது மக்கள்.. புது நிகழ்வுகள். புது அனுபவத்திற்காக. !" என்றேன்.
"இந்த மரங்களெல்லாம்.. இங்கேயேதானே இருக்கிறது? .. அதற்கெல்லாம் சலிக்காதா?!"
மரங்களை பார்த்தேன்..!
பச்சையின் பல பரிமாணங்களை காட்டிய மரங்கள்.. நொடிகளில் கறுத்திருந்தன!
வானத்தில்.. வனம் பூசிய வானத்தில்.. நீலம், சாம்பல், கருமை, இன்னும் எத்தனையோ..!
இருளுக்கும் ஒளிக்கும்.. இத்தனை கூடலா? இத்தனை ஊடலா?
புதிதாய் முளைத்த புவியின் சூரியன்கள்.. மரங்களின் பாதங்களுக்கு.. மஞ்சள் பூசி விளையாடின..!
அதோடு முளைத்த.. அத்திடலின்.. நீர்வீச்சுக்கள்.. அந்த மஞ்சளை, கழுவவா நீர் தூவின?
அதுவும்….. நளினமாய்.. நாட்டியமாடிக் கொண்டே?!
"சலிக்காதா?!" - இருகரங்களாலும் எனை இழுத்து.. கேள்விப்புருவம் உயர்த்தினாள்! அவள் விடுவதாய் இல்லை!
"சலிக்காது..! அதற்குதான் நகர முடியாதே?! அதனால... அது அங்க இருந்த படியே, மாறி, மாறி வரும் காற்று, வெயில், குளிர், மழை.. இப்படி எல்லா பருவங்களையும்.. எல்லா நிமிடங்களையும், தனக்கு ஏத்த மாதிரி, மாத்திக்கிட்டு..அல்லது,. அதுக்கு ஏத்த மாதிரி தன்னை மாத்திக்கிட்டு.. அழகா .. ஒவ்வொரு நொடியையும் ரசிச்சுகிட்டே வாழும்?!" - கூறி முடித்து.. சுதாரித்தேன்..!
"அப்பா! புரிய வச்சுட்டேன்!" - என்று எனக்கு ஒரு சபாஷ் சொல்ல முயல்வதற்குள்..
"நமக்கும் தான்.. எல்லாம் மாறி மாறி, அழகழகா வருதே? நீ ஏன்.. புது அனுபவம்!.. புது அனுபவம்!-னு, எங்கெங்கேயோ போற?" கணை தொடுத்தாள்..!
தூரத்தில் சட்டென்று கடந்த காரின் ஒளிக்கதிர்கள்.. கன்னத்தில் "பளார்" என்று அறைந்து விட்டு கடந்தனவோ.. என்பது போல..!!
வாரித் தூக்கினேன்.. தோளில் சாய்த்து.. அணைத்து.. விழி மூடினேன்.. நீள் சுவாசம் கொண்டேன்.! முத்தமிட்டேன்..! பதிலின்றி தோற்றேன்!
அமைதியாய் சிலநிமிடங்கள் கடந்தன..! கடந்த காற்று குசுகுசுத்தது..!
"பதில் சொல்லிப்போனதோ?!"
"இருக்கலாம்.. இருந்தும்... என் புலன்களுக்கு எட்டிவிடவா போகிறது?!" புன்னகைத்து நடந்தேன்..!
அவளோடு.. இயற்கையும் துணைக்கு வந்தது..!
மரங்கள்.. "பெருமிதமின்றி".. தலையசைத்து..என் தேவதைக்கு விடைகொடுத்தன..!