Friday, April 30, 2010

நீ ஒரு வித்தியாசமான சுவாரஸ்யம்..!

நீ நிராகரித்த பொழுதுகள் - நிஜமல்லாதிருக்கட்டும் என ஒரு சிற்றாசை..!

நீ வாராத நாட்கள் - நிறமற்று கடந்ததோ என ஒரு பிரம்மை..!

நீ புன்னகைத்த பொழுதுகள் - நிரந்தரமாக நின்றிருக்க ஒரு விழைவு..!

நாம் சண்டையிட்ட கணங்கள் - சரிதையில் வரையப்பட்ட நற்சிற்பங்கள்..!

எப்படி பார்த்தாலும்... நீ ஒரு வித்தியாசமான சுவாரஸ்யம்..!


Friday, April 23, 2010

உன் ரசிகன்...!

இதுவரை உணராத உணர்வுகள்..!
இதுவரை அறியாத முகபாவங்கள்..!
அடிக்கடி நினைந்து அத்தனையும் ரசிக்கிறேன்..!
எனக்குள்ளே நானே இதமாய் புன்னகைக்கிறேன்..!
நிச்சயமாய் நான் உன் "ரசிகன்" தானடி..!

மாயா..!

ஒவ்வொரு கணமும் புதுமையாய்..!
ஒவ்வொரு நொடியும் புதிராய்..!
ஒருசேர எனை மாய்க்கும் அவளுக்கு...
"மாயா" சரியான பெயர்தான்..!

Monday, April 19, 2010

மழை நனைத்த மண்ணவள்..!

மனங்குழைய தனிமையில் பயணித்தவென்னோடு 
மழை நனைத்த மண்ணவள் துணைக்கு வந்தாள்..! 
பெண்ணின் போதை என்னிலும் உண்டென்றாள்..! 
மழைமது அருந்தி மறுமுறை பூத்தாள்..! 
மலர்ந்ததின் மணமது மனமதை மயக்க.. 
மஞ்சள் இளவேனிற் துளிரெலாம் உடுத்தி.. 
பற்பல பசுமையால் என்பாழ்மனம் கெடுத்தாள்..! 
இந்த நொடியும் நீளாதா என்றெனை ஏங்க வைத்தாள்..! 
இந்த நொடியில் இறப்பதும் சுகமென மாயத்தாள்..! 
மண்ணவள் மணமதை அழகுடன்… 
கிறங்கி கைவிரித்து மீண்டும் சுகித்தேன்..! 
என் "சொர்க்கம் நீயடி" என்றே..!

Friday, April 16, 2010

விதவிதமாய் ராட்டினங்கள்..!

விதவிதமாய் ராட்டினங்கள்..!

விளையாட்டாய் ஏறியமர்ந்தேன்..!

விந்தையாய் சுற்றியது..! ஏறியதா? இறங்கியதா?

சுழன்றதா? நின்றதா? சுழலுக்குள் எதிர்சுழல் செய்ததா?

ஏதும் புரியாதிருந்தது..! 

பயந்தேனா? பற்கள் கடுமையாய் கடிபட்டனவா?

மகிழ்ந்தேனா? மனம் கொஞ்சம் சிறகடித்ததா?

இறந்தனா? இதயம் அடிக்கடி திடுக்கிட்டதா? - எனை 

இழந்தனா?  இமைகள் அனிச்சையாய் மூடியதா?

விளங்கி தெளிவதற்க்குள் விருட்டென நின்றது..!

மழலையானதில் மகிழ்ந்து இறங்கினேன்..! - மீண்டும் 

ஏறுவனோ என்பதும் எட்டவில்லை என் சிற்றறிவிற்கு..!

Thursday, April 08, 2010

அவள் வயப்பட்ட மழலையாய் நான்..!

கடகடவென சிறகடித்தாள்..!
துள்ளித் தாவினாள் இங்குமங்கும்..!
வெள்ளை உடுத்தவில்லை இவள் தேவதையுமில்லை..!
வெறித்துப் பார்க்கவில்லை இவள் வேங்கையுமில்லை..!
மெல்ல நெருங்கினேன்.. மேனிசிலிர்த்து நகர்ந்தாள்..!
மீண்டும் நெருங்குவனோ என்ற மிரட்சியில் அவள்..!
இத்தனை பீடிகைக்கு மயங்க வேண்டாம்..!
எனை விட்டுச் சிறகடித்துப் பறந்த
அழகு "சிட்டுக்குருவி" தான் அவள்..!
துரத்தித் தோற்றுக் கொண்டிருக்கிறேன்..!
அறியாமல் அவள் வயப்பட்ட மழலையாய் நான்..!