Saturday, December 01, 2007

விவாகரத்து..!

"நீ என்னை பிரிய சம்மதித்து விட்டாய்!"

இன்று நாம் பிரிய வேண்டிய நாள்! எனக்கு நேற்று போல் தான் இன்றும், ஆனால் நீ துடிக்கும் துடிப்புகளில் நேற்றுக்கும் இன்றுக்கும் அதீத வித்தியாசம். சில நாட்களாகவே நாம் பிரிவதிற்கான அத்தனை அறிகுறிகளும் தென்பட்டது.

எனக்கும் உனக்குமான அந்த உறவுப்பாலம் இனி இருக்குமா? நம் தொடர்புக்கான உண்மை சாட்சி அந்தக்கயிறு! அந்த மங்களநாண்! அந்த புனிதக்கொடி! இன்னும் சில நாட்களில் புறக்கணிக்கப்படலாம்! அறுக்கப்படலாம்! இல்லை அது தன் தனித்துவம் இழக்கலாம்! அதன் புனிதம் மறைந்தும் போகலாம்.

“பிரிவு வரும் வரை, உறவின் மகத்துவம் தெரிவதில்லை.” அதை இன்று உணர்கிறேன். அனால் நான் இன்னும் உன்னை பிரியவில்லை. எனக்கு பிரிவெனும் அனுபவம் இதுவரை இல்லை. இன்னும் நான் அமைதியாய் தான் இருக்கிறேன். ஆனால் உன் பரிதவிப்புதான் என்னை பெரிதும் பாதிக்கிறது. இந்தப் பிரிவில் உனக்கு ஏற்கனவே அனுபவம் உண்டோ?!

கண்ணை இமை காப்பது போல் நீ எனை காத்தது உண்மை. ஊரறிய சொல்வேன், எனக்காகவே நீ வாழ்ந்தாய். ஈருடல் ஓருயிர், ஓருடல் ஈருயிர் அத்தனையும் நமக்குள் சாத்தியமானது. உன் உணவை எனக்கும் பகிர்ந்தளித்தவலல்லவா நீ?!

“பிறகு ஏன் எனைப்பிரிய சம்மதித்தாய்..!?!”

என் ஒவ்வொரு வளர்ச்சியிலும் நீதான் இருக்கிறாய் என்பதை இந்த உலகம் அறியாமலா இருக்கும்? என் ஒவ்வொரு வளர்ச்சியிலும் நீ அடைந்த பூரிப்பை நான் அறிவேன். எனக்காக நீ பட்ட கஷ்டங்கள் அறிவேன்! உனக்கு பல ஜென்மங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஆனால் இந்த பிரிவு?! இது என் உயிரையும் குடிக்குமோ என்ற பயம் உனக்கு! இல்லை உன் உயிரையும் குடிக்கலாம்.

இதில் உனக்கு மகிழ்ச்சியா என்ன? உன்னைச் சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் எதோ நல்ல காரியம் நடக்க இருப்பது போல், இனிப்புகள் வாங்க கிளம்புகிறார்கள். அதை நீயும் ஆமோதிக்கிறாய்!

எனக்கு தான் எதுவும் புரியவில்லை..!

இயற்கையின் நீதி இதுதானோ? இதோ பிரிவின் நேரம் வந்துவிட்டது! உன் கதறலை நானும் உணர்கிறேன். சில கரங்கள் எனை வலுக்கட்டாயமாய் உன்னிடமிருந்து பிரிப்பதாய் உணர்கிறேன். உனைப்பிரிந்தபின் அந்த முதல் சுவாசம்கூட என் மூளையை சுள்ளென்று தாக்கியது. இதற்குமுன் நான் சுவாசித்ததே இல்லையோ என்பதாய் பட்டது. இந்த வலி தாங்க இயலாததாய்.. கதறி அழுதேன். நீயும் மயங்கிப்போனதாய் சிலர் சொல்வது மட்டும், அந்த இரைச்சல்களுக்கிடையே கேட்டது.

தாங்காத அழுகை.. உடல் தளர்ந்து உறங்கினேன். அவர்கள் ஏதேதோ சொல்லி, என் மேல் தண்ணீர் தெளித்து, துவட்டி, அலங்கரித்து, பட்டுத்துணியில் சுற்றி ... எத்தனையோ சடங்குகள் செய்தனர். நான் விழிப்பதாய் இல்லை.

அதோ மீண்டும் உன்குரல்! அதோ நீ! உன்னுடன் அந்த ஆண்மகன். நீ என்னை வாரி எடுத்து அணைத்தாய். மீண்டும் உன் ஸ்பரிசம். எனக்கு அதீத மகிழ்ச்சி. ஆனால் அந்த ஆடவன்? யாரவன்?

ஆனந்தக் கண்ணீருடன் நீ சொன்னாய்!
"அப்பா பாருடா! செல்லம்! " - என்று எனை முத்தமிட்டாய்!

எதையும் கேட்க நான் தயாராக இல்லை. " ங்கா.. ங்கா.. ! " எனச்சங்கீதமாய் ஒலித்தேன். அவன் மெல்ல எனைத்தொட்டு பூரித்தான். அவன் ஸ்பரிசமும் எனக்கு இனித்தது. எனை அள்ளி மார்போடு அணைத்தாய்! என் உதடுகள் அனிச்சையாய் அசைய, எனக்கான நின் அமுதத்துளிகள், என் உணவுக்குழாயில் பயணித்தது!
சில நொடிகளில் நான் சொர்க்கத்தை உணர்ந்தேன். நம் பிரிவின் அர்த்தம் மெல்ல புரிந்தது.

இதோ உன் கதகதப்பில்.. உலகம் மறந்து உறங்குகிறேன்.. என் இனிய அம்மா!