Sunday, April 22, 2007

மாலைக்கடற்கரையில் அவளோடு..!!





அழகான ஞாயிறு. அவளைக்காண நான் கிளம்பினேன்.
அழகான ஞாயிறு, கதிர்கோலால் அலைகடலோடு பாடம் நடத்திக்கொண்டிருந்தது. இந்த இனிய இசையொடு நகர்ந்தது அந்த எளிமையான மாலை.

மெதுவாய் அவளிருந்த இடம் நோக்கி நகர்ந்தேன். சோளம் சுட்டு விற்றுகொண்டிருந்த அந்த வியாபாரி, ஒரு சிறிய சக்கரம் போன்ற ஒன்றை படுவேகமாய் சுழற்ற, அது காற்றை அந்த அடுப்பில் சடசடவென ஊதியது. இப்படி அடுப்பிலிருந்து பந்துகளாய் நெருப்புபொறிகளை பறக்க விட்டு பலரை கவர்ந்தார். அந்த இளம் இருட்டில், சூரியப்பொறிகள் கடலருகில் பறப்பதாய் எனக்குள் யூகம் பிறந்து, எனக்குள்ளே சிரித்துக்கொண்டேன்.

அடுத்த சில நொடிகளில் ஒரு பொறி என் கண்ணில் விழுந்தது. அந்த வியாபாரி நல்லவர், மிகவும் இரங்கி வந்து மன்னிப்பு கேட்டார். ஒரு விதமாய் சமாளித்து திரும்பினேன். இதோ! அவள் என் கரங்களில். இருள் கொஞ்சம் கொஞ்சமாய் வயதுக்கு வந்தது.


என்னால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. என் நாவில் கடலை விஞ்சும் அளவுக்கு எச்சில் ஊறிக்கொண்டேயிருந்தது.
அவளழகிய கேசம் மெல்ல கோதி, பின் லாவகமாய் ஒதுக்கினேன்.
ஊடல் கூடிய எதிர்பார்ப்பு, மெல்ல சிரித்தாள்.
அழகாய், அழகழகாய் முத்து பற்கள்.! எங்கிருந்து பெற்றாளோ இவள்?..
இவள் தேகம்..பாலென்பதா? பழுத்த எலுமிச்சையென்பதா?..
உதடுகள் மேலே ஒரு மெல்லிய துடிப்பு... உணரக்கூடியதாய்.
இதோ! அவளை என் உதடுகள் நெருங்கிவிட்டன.

இனிப்பு..!
புளிப்பு..!
உவர்ப்பு..!
காரம்..! அமுதம்..!! இவ்வளவு சுவையா இவளிடம்..!!
உதடுகளை நா ஒருமுறை துடைத்துவிட்டது.
நுனி நாக்கு மீண்டும் மீண்டும் அவள் ருசியை உதடுகளில் தேடியது. கட்டுப்படுத்த முடியாமல் மீண்டுமவளை முத்தமிட்டேன். அவள் பற்களையே கடித்து உறிந்து விட்டதாகவே.. ஒரு உணர்வு பிறந்தது. இருந்தும் சலிப்பே தட்டவில்லை. இதோ மீண்டும் மீண்டும் அவளின் சுவை என் உதடுகளில்.

கொஞ்சம் கொஞ்சமாய் என்னை நான் கட்டுக்குள் கொண்டு வந்தேன். அவள் இன்னும் என் கரங்களை விட்டு பிரியவில்லை. பிறகு தான் எனக்கு, திடீரென ஞானம் பிறந்தது.

அவள் இதற்கு முன்னே பலரால் சுகிக்கப்பட்டவள், இனிமேலும் பலரால் சுகிக்கப்படுவாள். அவள் மேல் கோபம் தலைக்கேறியது. என் காமம் தான் கட்டுக்குள் வந்து விட்டதே..!

கேசக்கற்றையை பிடித்து கழுத்தை திருகி கடலில் வீசியெறிந்தேன். சில கேசக்கற்றைகள் மட்டும் என் கரங்களில்.

அலைதனில் அவள் அலைக்கழிக்கப்பட்டாள். அவளின் அசைவுகளும் துடிப்புகளும் அலைகளொடு பொருந்தின. நான் அவற்றை ரசித்தேன்.
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கரையோரமாய் நடந்தேன்.
அவள் மெல்ல நகர்ந்தாள், திடீரென மேலெழுந்த அந்த அலைக்கூட்டம் அவளுக்கு நகர உதவின.

அவளோ, என்னை தொடர்ந்து வந்தாள்..! அலைகளோடு ஈரமாய்..! என் எச்சில் பட்டதற்கா இவ்வளவு விசுவாசம் காட்டுகிறாள்..?! ஒவ்வொரு அலைக்கும் அவள் ஆடுவது, என்னிடம் "என் உறவுகளை பலர் சுகித்திருக்கலாம். ஆனால் நான் உன்னால் மட்டும்தானே சுகிக்கப்பட்டிருக்கிறேன். ஏன் இப்படி செய்தாய்?!" - என்று கேட்பதாக பட்டது, எனக்கு.

அதோ ! அலைகளோடு குதித்து குதித்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், அவளை மிதித்தான். அவள் கதறியிருக்கலாம், ஆனால் கடலலையின் இரைச்சலுக்கிடையே ஏதும் என்காதுகளை அடையவில்லை.

குதிரை மீது ஒரு காவலர் அவள் திசை நோக்கி வந்து கொண்டிருந்தார். இருள் முதுமையடைந்திருந்தது. அவளை அவர் கவனித்திருக்க சாத்தியமில்லை.அந்தோ..!! அந்த குதிரை அவளை படுவேகமாய் மிதித்தது. தோல் உரிந்தது. அவள் உள்ளுறுப்புகள் கூட என் கண்களுக்கு புலப்பட்டன.

எனக்கு ஒருபுறம் பரிதாபம். இன்னொருபுறம், இவள் நமது உடமையில்லையே என்ற மெத்தனம். சில நொடி நின்று மீண்டும் நடக்க ஆரம்பித்தேன்.

ஏனோ அந்த அலைகள் மட்டும் அவளுக்கு உதவிக் கொண்டேயிருந்தன. நகர்ந்து, ஆடி ஆடி என்னை தொடர்ந்தாள். எனக்குள்ளுரப் பெருமை. இந்த அளவுக்கு இவளை கவர்ந்துவிட்டோமா?! என்று.

அதோ எதிரில் ஒரு வயதான மூதாட்டி. குப்பைகளை பொறுக்கி கூடையில் போட்டுக்கொண்டே நடந்து வந்தாள். சில கிளிஞ்சல்களையும் சேகரித்து வைத்துக்கொண்டே, அவள் இருந்த இடத்தை நோக்கி நடந்தாள்.

அவளை கவனித்து விட்டாள். குனிந்தாள். எடுத்தாள். கூடையிலிருந்த மற்ற சோளக்கட்டைகளோடு அவளையும் எறிந்துவிட்டு, அடுத்த குப்பையை தேடி பயணமானாள்.

பிறகு தான் ஞாபகம் வந்தவனாய், திரும்பி நடந்து வந்து, வாங்கிய சோளத்திற்காக ஐந்து ரூபாயை கொடுத்தேன்.

அந்த வியாபாரியும் சிரித்துக்கொண்டே, "நானும் மறந்துவிட்டேன், தம்பி. கண்ணில் வலியேதும் இல்லையே?" என்றார்.

"இல்லைங்க." நான் நகர ஆரம்பித்தேன்.


"இந்தாங்க தம்பி..!! காசு வேண்டாம். இது என் திருப்திக்காக.." கேசம் ஒதுக்கி, உப்பு, மிளகாய் பொடி, எலுமிச்சை சாறு தடவிய இன்னொருத்தியை (இன்னொரு சோளத்தை) கொடுத்தார்.
அவள் சுவைக்கடிமையிருந்தாலும், ஒரு பிகுவுடன் "உங்களுக்காக வாங்கிக்கிறேன். நன்றி". வாங்கியும் விட்டேன்.

மீண்டும் என் உதடுகள் துடிக்க, நாவில் அருவி ஊற்றெடுக்க, என் உதடுகள் அவளை மெல்ல நெருங்கின.

5 comments:

Bee'morgan said...

ஆகா.. வழக்கம் போல் சிலேடையில் பின்னியிருக்கீங்க.. :-) நடை சிறப்பு.. தெளிந்த நீரோடையில் அங்கங்கே முடிச்சு போட்டு அவிழ்த்திருப்பது அருமை.. எழுத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது உங்கள் புகைப்படத்தேர்வு. ஒன்று மட்டும் உறுத்தல்.. கடைசியில் ஒரு வரியைத் தவிர்த்திருக்கலாம்.. >>>"(இன்னொரு சோளத்தை)"

MaYa said...

நன்றி.

சிலர் புரிந்து கொள்ள சுலபமாக இருக்கட்டுமே என்பதற்க்காகவே.. அந்த "இன்னொரு சோளம்" :-)

MaYa said...

பெண்ணை சோளமாகவே சொல்லுதல் உருவகம்,
இயல்பாக நடந்த செயலில் என் குறிப்பை ஏற்றியது "தற்குறிப்பேற்ற அணி..!"

சிலேடை இங்கே..!!
http://maya-sitharal.blogspot.com/2007/05/blog-post.html

Unknown said...

நன்றாக இருந்தது :)

நான் யார்?? சதீஷ் (Pரொடுக்டிஒன்) ஞாபகம் வந்துருச்சா? இப்பத்தான் ஒர்குட்'ல பாத்தேன். நானும் கூட எதாவது ட்ர்ய் பன்னுவேன் என்னொட பிளாக் கொஞ்சம் எப்படி இருக்குனு சொல்லு

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

ksk_rect அப்டிங்ர பேர்ல இருக்குறது என்னோட கொம்மென்ட் தான்.