Wednesday, August 24, 2011

அந்நியமாய் அத்தனையும்..!

அந்நியமாய் அத்தனையும்..!
அவளோ?! அவள் புன்னகையோ?!
வனப்பாய் இசையெனப் பேசும் சிரிப்போ?! - 
வரம்பின்றி கவிழ்க்கும் கன்னக்குழியோ?!
வாட்டி வதைக்கும் வஞ்சக விழியோ?!
அத்தனையும் அந்நியமாய்!! - எந்த 
உலகத்து  தேவதையடி நீ?!

Saturday, July 16, 2011

தேவதைகள் வேறெங்குமில்லை!!

அவளின் பிஞ்சுவிரல்பிடித்து நடந்து கொண்டிருந்தேன்...!

பிஞ்சு மாலைக்கு கொஞ்சம் பொறாமை..! முகம் சிவந்தது! 

சூரியன் ஒளிந்து சில மணித்துளிகளில்..

வண்ண மேகங்களை.. ஆங்காங்கே யாரோ தூவி..

வண்ணம் பிரிகையிலே.. "நில்!" என்று சொல்லியதாய்..

தனக்கே உரித்தாய்.. தனிக்கவிதை எழுதியிருந்தது வானம்..!

 

"இங்கு ஏன் வந்தோம்?"

"பூங்கா அழகு .. மரங்கள் அழகு.. நல்ல காற்று..!!" என்றேன்.

"நம் வீட்டருகிலும் இது போலத்தானே இருக்கும்..! இங்கு ஏன் வந்தோம்?" - மறுபடியும் அவள்!

 

கண்கள் உருட்டி உருட்டி.. இமைகள் அகல விரித்து.. புருவங்கள் நடனமாட.. 

கவிதை கேட்கும் கேள்விக்கு.. பதிலளிக்க கொஞ்சம் தெளிய வேண்டியிருந்தது..

 

"புது இடம்.. புது மக்கள்.. புது நிகழ்வுகள். புது அனுபவத்திற்காக. !" என்றேன்.

"இந்த மரங்களெல்லாம்.. இங்கேயேதானே இருக்கிறது? .. அதற்கெல்லாம் சலிக்காதா?!" 

 

மரங்களை பார்த்தேன்..!

பச்சையின் பல பரிமாணங்களை காட்டிய மரங்கள்.. நொடிகளில் கறுத்திருந்தன!

வானத்தில்.. வனம் பூசிய வானத்தில்.. நீலம், சாம்பல், கருமை, இன்னும் எத்தனையோ..!

இருளுக்கும் ஒளிக்கும்.. இத்தனை கூடலா? இத்தனை ஊடலா?

புதிதாய் முளைத்த புவியின் சூரியன்கள்.. மரங்களின் பாதங்களுக்கு.. மஞ்சள் பூசி விளையாடின..!

அதோடு முளைத்த.. அத்திடலின்.. நீர்வீச்சுக்கள்.. அந்த மஞ்சளை, கழுவவா நீர் தூவின? 

அதுவும்….. நளினமாய்.. நாட்டியமாடிக் கொண்டே?!

 

"சலிக்காதா?!" - இருகரங்களாலும் எனை இழுத்து.. கேள்விப்புருவம் உயர்த்தினாள்! அவள் விடுவதாய் இல்லை!

 

"சலிக்காது..! அதற்குதான் நகர முடியாதே?! அதனால... அது அங்க இருந்த படியே, மாறி, மாறி வரும் காற்று, வெயில், குளிர், மழை.. இப்படி எல்லா பருவங்களையும்.. எல்லா நிமிடங்களையும், தனக்கு ஏத்த மாதிரி, மாத்திக்கிட்டு..அல்லது,. அதுக்கு ஏத்த மாதிரி தன்னை மாத்திக்கிட்டு.. அழகா .. ஒவ்வொரு நொடியையும் ரசிச்சுகிட்டே வாழும்?!" - கூறி முடித்து.. சுதாரித்தேன்..!

 

"அப்பா! புரிய வச்சுட்டேன்!" - என்று எனக்கு ஒரு சபாஷ் சொல்ல முயல்வதற்குள்..

 

"நமக்கும் தான்.. எல்லாம் மாறி மாறி, அழகழகா வருதே? நீ ஏன்.. புது அனுபவம்!.. புது அனுபவம்!-னு, எங்கெங்கேயோ போற?" கணை தொடுத்தாள்..!

 

தூரத்தில் சட்டென்று கடந்த காரின் ஒளிக்கதிர்கள்.. கன்னத்தில் "பளார்" என்று அறைந்து விட்டு கடந்தனவோ.. என்பது போல..!!

 

வாரித் தூக்கினேன்.. தோளில் சாய்த்து.. அணைத்து.. விழி மூடினேன்.. நீள் சுவாசம் கொண்டேன்.! முத்தமிட்டேன்..! பதிலின்றி தோற்றேன்!

 

அமைதியாய் சிலநிமிடங்கள் கடந்தன..! கடந்த காற்று குசுகுசுத்தது..!

 

"பதில் சொல்லிப்போனதோ?!"

 

"இருக்கலாம்.. இருந்தும்... என் புலன்களுக்கு எட்டிவிடவா போகிறது?!" புன்னகைத்து நடந்தேன்..!

 

அவளோடு.. இயற்கையும் துணைக்கு வந்தது..! 

மரங்கள்.. "பெருமிதமின்றி".. தலையசைத்து..என் தேவதைக்கு விடைகொடுத்தன..!

Sunday, June 12, 2011

தாளம் தப்பியும் இன்னிசை!

மழைபெய்து ஓய்ந்திருந்தது..!

மழைமெழுகி ஈரம் காயாத தரைகள்..!

அவளோடு விரல்பிடித்து நடந்திருந்தேன்.!

பெயரறியா பூச்சியொன்று கடந்தது..!

நின்றாள் அவள்..! நிதானித்து கவனித்தாள்..!

கண்டு அவளோடு.. களிநடனமாடி...

மண்ணுக்குள் மறைந்தது.. நொடிகளில்..!

யார்சொல்லிக் கொடுத்ததோ? என்றெண்ணி முடிப்பதற்குள்..

சிறுகல் எடுத்தாள்..! மண்பறித்து தேடினாள்..!

உதடுகள் பிதுக்கி.. உச்சுக்கள் கொட்டி..

மலரென மல்ர்விரல்கள் விரித்து..

தூரிகையாய் சிலமுறை சுழற்றி..

காற்றில் ஓவியம் வரைந்துகொண்டே சொன்னாள்..

 

"காணும்.. காணாப் ..போச்!"

 

தாளம் தப்பியும் இன்னிசையாய் ஒலித்ததது..!

வரையாவிடினும்.. உயிரோவியமாய் ஒளிர்ந்தது..!

மழலையே நீ வாழி..! மகளே  நீ வாழி..! எனக்கும் 

தாய்மையை உணர்வித்த மகோன்னதமே நீ வாழி!

Wednesday, May 25, 2011

"என் இனிய நல்லவா..!"

"ஒழுக்கத்திற்கான உன் வரையறை என்ன?" என்றாள்.

 

"பின்னாளில் எண்ணி வருந்தும் எதையும் இந்நாளில் செய்யாதிருப்பது!" என்றேன்.

 

"என் இனிய நல்லவனே!" என்று கூறிக்கொண்டே..

கன்னங்கள் இரண்டையும் கைகளால் பிடித்து..

செல்லமாய் இழுத்து.. மெல்லமாய் தலையில் இடித்து..

மூக்கு நுனிகள் உரசி.. நொடிமுத்தம் தந்தாள் உதட்டில்!!

 

கண்மூடினேன்...

 

அவள் வாசம்.. சுவாசம்.. ஸ்பரிசம்.. 

அத்தனையும் ஒரு சேர உள்ளிழுத்தேன்..!

அந்த நொடியை.. நொடிகளாய் நீட்டினேன்..!

அவளோடு லயித்தேன்.. அகத்தில் தியானித்தேன்..!!

 

விழிக்கையில்..

 

சிரிக்கும் கண்களும்.. துடிக்கும் உதடுமாய்..

நாணம் துணைகொண்டு.. நகர்ந்திருந்தாள் சில அடிகள்..

தீண்டி விலகிய தென்றலாய்.. 

முகம் பட்டு நழுவுகிற மென்பட்டுத் துகிலாய்..

பட்டுச் சிறகசைக்கும் பறவையாய்..காற்றோடு 

நளினமாய் நகர்ந்துகொண்டிருந்தாள்.. என் தேவதை..!

Thursday, April 07, 2011

காதல் மரக் காடுகள்..!

காதல் விதை விதைத்தாய் என் நெஞ்சில்..

விளையாட்டாய் நீர் வார்த்தாய்..! நானும் தான்..!

ஊடலால் வெயிலும் தந்தாய்..! நானும் தான்.!

துளிர்த்து மளமளவென மரமானது..! நம் காதல்..!

 

உன் ஒவ்வொரு புன்னகைக்கும்..

பூத்துக் காய்த்து.. புது விதை வீழ்ந்தது...!

சட்டென விடை கேட்டாய்....!

விட்ட கண்ணீரில் விதையெலாம் துளிர்த்தங்கே..!

 

அன்றொரு நாள் வந்தாய்..! 

ஒரு விதை எடுத்துக்கொண்டாய்..!

ஒன்றுமில்லை உனக்கும் எனக்குமென்றாய்..!

நீ எடுத்தது ஒரு விதை! எஞ்சியதை என்ன செய்ய?


பிஞ்சுச்செடியல்ல பிடுங்கி எறிய

தனியொரு மரமல்ல வேரோடு வீழ்த்த..

அடர்ந்த காடடி இது..! என் இதயத்தில் 

அழகிநீ விதைத்த காதல் மரக்காடுகள்..!

 

காயாத உன் நினைவின் சாரலில்..

அடுத்த தலைமுறை விதைகளும் வீழுதங்கே..!

கொஞ்சம் அனல் வீசிப்போடி..!

எந்தன் நெஞ்சும் எரிந்து சாகட்டும்.. தீயில்..!

Friday, February 18, 2011

நீ சொல்லாததை...

நீ சொல்லாததையும்...
சொல்லியதாய் எண்ணி...
எதற்கும் ஏங்காதவன்போல்..
வாழ்வதும் சுகமடி..!

Monday, February 14, 2011

பூமியை புரியவைப்பதில்..

பூமியை புரியவைப்பதில்... பெண்மைக்கே பெரும்பங்கு..!
தாயாய்.. தனித்துவமாய்.. எனை வளர்த்தவள் பெண்..!
தோழியாய்.. சகோதரியாய்.. துணையிருந்தவள் பெண்..!
காதலால் என்கப்பல்கள் கவிழ்த்தவர்கள் பெண்கள்.!
கடைசியாய் எனை கரைசேர்த்தவள் ஒரு பெண்..!
கவிதையாய்.. எனையும் தாயாக்கிய மக்களும் - என் 
இரண்டாம் மழலையில் விளையாடிய பேத்திகளும்..!
கடவுளாய் எனை மாற்றிய சந்ததிக்கும்.. வித்தாய் பெண்..!
இங்கே...
ஆண்களை மறந்தது இதன் பொருட்பிழையில்லை..!
நன்றாய் கவனியுங்கள்.. 
பெண்மையில் ஆணும் அடங்கலாம்..!

Tuesday, December 28, 2010

உனக்காக மட்டும்....

முன்பெல்லாம்...
"உனக்காக மட்டுமே இதைச் செய்கிறேன்" என்று
எனக்காக மட்டும் செய்தாள்.. சிலவற்றை..!!
பின் ஒரு நாள்...
சண்டையிட்டாள்..! பேச மறுத்தாள்..! - அவள்
கோபம் தணிந்தும்..
தணியாதிருந்தேன் நான்..!
தனியாய் இருந்தேன் நான்..!
எனக்காக மட்டும் செய்யும் ஒன்றை செய்து...
எனக்காக காத்திருந்தாள்..!
அவளுக்காக தணிந்தேன்.. புன்னகைத்து...
அவளுக்காக மட்டும்..!

Sunday, July 11, 2010

என் வரலாறு..!

என் வரலாறு இப்படியும் வரையறுக்கப்படலாம்..!
"அவளுக்கு முன்"
"அவளுக்குப் பின்"
"இடையே சிலமுறை நான் சிலுவையில் அறையப்பட்ட காலம்"

Wednesday, June 30, 2010

சடலம் எச்சம்..!

சுடச்சுட சொல்லெறிந்த உன்னை 
சாடவும் தெரிந்தறியா தென்மனம் 
சாகவும் துணிந்ததடி..! - சடலம் எச்சம்..!

Sunday, June 20, 2010

தருணம் எதுவாயினும்...

தருணம் எதுவாயினும்... மகிழ மட்டும் அறிந்திருந்தேன்..!
நீ வந்து போனாய்..! ஏதேதோ தந்துவிட்டு போனாய்..!
இப்போதெல்லாம்...
மகிழுந்தருணங்களில் வருந்துகிறேன்...!
"நீயருகில் இல்லையே" என்று...
"நீயருகில் இல்லையே" என்று...
வருந்துந் தருணங்களில் மகிழவும் செய்கிறேன்..!
என்ன மாயம் செய்தாயடி?!

Saturday, June 19, 2010

நினைவுகளால் அலைக்கழிக்கப்படுகிறேன்..!

நினைவுகளால் அலைக்கழிக்கப்படுகிறேன்..!
நீ செய்த குறும்புகள்..! நீ பார்த்த பார்வைகள்..!
நின் சொற்கள் - அவை தொனித்த தொனிகள்..!
கலங்கிய நெஞ்சம்... ததும்பிய கண்ணீர்..!
சில நேரம் தழுதழுத்த குரல்..
பலவிதமாய் நீ உடுத்திய உடைகள்..
பரபரப்பாய் நாம் கடத்திய பொழுதுகள்..
அத்தனையும் ஒருசேர அழகழகாய்..
சிந்தையெல்லாம் ஆக்கிரமித்த நீ..!
சிரிக்கிறேன்.. அழுகிறேன்.. சிந்திக்கிறேன்
நிச்சயமாய் நின் நினைவுகளால்...
அலைக்கழிக்கப்படுகிறேன்... 
அமுதே! எனதழகிய விஷமே..!

Thursday, June 17, 2010

பேசாமலேயே பேசுகிறோம்...!

"இனி நாம் பேச வேண்டாம்" என்றாள்..!
"சரி" என்றேன்..! "காரணம்?!"
"காதலால்... ஆதலால்...!!" என்றாள்..!
"கட்டளைகள் மறுப்பனோ?!" என்றேன்..!
புரிந்து புன்னகைத்தோம் இருவரும் ....
இப்பொழுதெல்லாம்.....
"பேசாமலேயே பேசுகிறோம்...!"

Sunday, June 13, 2010

இனிஅவள் தூரமென்ற உணர்வொலி..!

இதுவரை உணரவில்லை இந்த வலியும்..! 

இதுவரை கிடைக்கவில்லை எந்த சொல்லும்..!

இனியவள் தந்துவிட்ட இன்ப வலி..!

இனிஅவள்  தூரமென்ற உணர்வொலி..!

அழவில்லை.. இருந்தும் ஏதோ... சின்ன பயம்..!

அளவில்லை.. கொஞ்சம் நானும்... உந்தன் வயம்..!

தொடரட்டும்.. இதன் எல்லை வரை..

துடிக்கட்டும்.. இதயம் அது வரை......மிதமாய்..!

புரியாது புன்னகைக்கிறோம்..!

உதற முயன்றேன் பலமுறை..! அழுது 

அருகே நெருங்கினாள் இதுவரை..!

கட்டுக்கள் உடைக்குமோ நம்சிநேகம்?! - என 

சட்டென விலக யத்தனிக்கிறோம்..!!

தெளிவு பிறந்ததென்று மகிழ்வதோ?!

பிரிவு வருதென்று அழுவதோ?!

புரியாது புன்னகைக்கிறோம்..! - இனி 

அழுவதில்லை என்ற ஒப்பந்தத்தால்....

Saturday, May 22, 2010

வலியோடு இதயம்..!

வலியோடு இதயம் கனத்து... 
கனல்போல் இருளில் வானம்..! 
என்னோடு அழுதது மழையாய்..! 
அழுதகண்ணீர் யாருமறியாமல்.. 
உறக்கத்திலும் உதிர்ந்துகொண்டே.. 
இதோ விடிந்தது...புதுப்பொழுது..! 
இனிதாய் வெளிச்சம் கொணர்ந்து..! 
வாழ்க்கை புரிந்தது எனக்கு..! 
எழுந்து இயங்கினேன் புதுத்தெம்போடு.. 
என்னோடு துணைக்கு இயற்கை வந்தது..!

Wednesday, May 12, 2010

போடி..! இனி என் கண்முன் வராதே..!

"போடி..! இனி என் கண்முன் வராதே..!" - அதோ 
என் கனவுதேவதை கண்ணீர் வடிக்கிறாள்..!
கண்கள் கசக்கி..கவிதையாய் உனைப்போல் முகஞ்சுழித்து..
என்னோடு ஊடுகிறாள்..! உன்மீது பொறாமையால்..!
உன்பாதி பண்புகள் திருடி அவளுக்கு கொடுத்து..
என்பாதி உனைவிட்டு "வரமாட்டேன்" என்றால்..
வேறென்ன செய்வாள் அவள்?! "பாவம்..!!"

Friday, April 30, 2010

நீ ஒரு வித்தியாசமான சுவாரஸ்யம்..!

நீ நிராகரித்த பொழுதுகள் - நிஜமல்லாதிருக்கட்டும் என ஒரு சிற்றாசை..!

நீ வாராத நாட்கள் - நிறமற்று கடந்ததோ என ஒரு பிரம்மை..!

நீ புன்னகைத்த பொழுதுகள் - நிரந்தரமாக நின்றிருக்க ஒரு விழைவு..!

நாம் சண்டையிட்ட கணங்கள் - சரிதையில் வரையப்பட்ட நற்சிற்பங்கள்..!

எப்படி பார்த்தாலும்... நீ ஒரு வித்தியாசமான சுவாரஸ்யம்..!


Friday, April 23, 2010

உன் ரசிகன்...!

இதுவரை உணராத உணர்வுகள்..!
இதுவரை அறியாத முகபாவங்கள்..!
அடிக்கடி நினைந்து அத்தனையும் ரசிக்கிறேன்..!
எனக்குள்ளே நானே இதமாய் புன்னகைக்கிறேன்..!
நிச்சயமாய் நான் உன் "ரசிகன்" தானடி..!

மாயா..!

ஒவ்வொரு கணமும் புதுமையாய்..!
ஒவ்வொரு நொடியும் புதிராய்..!
ஒருசேர எனை மாய்க்கும் அவளுக்கு...
"மாயா" சரியான பெயர்தான்..!